பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

கவிதை :

 
சிறகுகள் வேண்டும்......
கவிதை : ஜெயஸ்ரீ ஷங்கர்.

பட்டு மேகத்தை உரசும் கண்கள்..
மனமோ... தொட்டுவர துடிக்கும்..
வழி பார்த்துக் காத்திருக்க...கிளி... 
வந்து மாட்டியதே...!

ஒரு நாள் ஒப்பந்தம் கிளியே...
உன் போல் நான் மாறவேண்டும்....
சரியென  சிறகுகள் தந்தாய்...பிழைத்துப் 
போ என குரலும் தந்தாய்..!

வெட்டவெளி வானில் நானும்..
சுற்றி சுற்றிப் பறந்தேன்....
உந்தன் குரலில் எந்தன் கீதம்..
உயர.... உயர....இசைத்திடவே...!

மலைகளைக் கடந்தேன்..
அருவியைக் கடந்தேன்..
ஆற்றையும் கடந்தேன்...
கோபுரங்கள் கடந்தேன்...

வேடனில்லாக் காட்டையும்..
வீரத்தோடு நான் கடந்தேன்...
சுதந்திர வானில் சுற்றும்போது...
என் சுற்றத்தை நான் மறந்தேன் ...!

பொய்யில்லை  புரட்டில்லை ...
புறம்பேச  எவருமில்லை ...
உடல்  மாற்றும்  புதுமை...  
இங்கில்லையோ !!

இன்னுமொரு  ஒப்பந்தம்.... 
போடலாமா? 
சிறகுகளைக் கேட்காதே....
 பைங்கிளியே...!
===========================================

வியாழன், 22 மார்ச், 2012


காய்காத மரம்...
ஜெயஸ்ரீ ஷங்கர்.

அதோ….அங்க ஒரு பெரிய மாமரம் தெரியுதே ..அந்த வீடு தான்..அங்க போய்… நிறுத்துங்க.
வித்யா .ஆட்டோக்காரரிடம் அவள் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு இறங்கத் தயாராகிறாள்.
இதோ…….இந்த மரம் தான்…
கந்தசாமி…! .அப்போ…..நீ எப்போ.. வருவியோ..என்ன செய்வியோ
எனக்குத் தெரியாது…நாளைக்கு இந்த மரம் இங்க இருக்கக் கூடாது…இது காய்க்காத மரம்….வெட்டிப்போடு… ஆமா….
சொல்லிப்புட்டேன்..மத்தபடி பேசினதெல்லாம் நியாபகம் இருக்குதுல்லே…என்ன….நீ ஒரு ஐநூறு ரூபா கூட ..தர மாட்டேங்கறே….
இந்த மரத்துக்கு….ரொம்ப கறாரா கட்டாதுன்னு சொல்றே…..அதான் எனக்கு குறையாத் தெரியுது…..என்று ஆதங்கத்தோடு கேட்க..

நெசமாலுமே…கட்டாது சாமி…தோ ..பாருங்க….!..நானே…ஒரு மெசினை வாடகைக்கு எடுத்தாத்தான் வேலை ஆகும்.
மெசினுக்கு  ஒரு மணி நேர வாடகையே  ஐநூறு கேட்பான்…நான் கேக்கற  நேரத்துக்குக் எனக்கு மெசின் கெடைக்கோணும் …
பிறகு தூக்குக் கூலி, வண்டிக்கூலி……அது……இதுன்னு……எனக்கே செலவு ஆயிரம் ரூபாய்த் தாண்டிரும்.. நீங்களாப் பார்த்து ….
ஏதோ…இந்தாப்…. பொழைச்சுப் போன்னு….எனாமாக் கொடுத்தாத்  தான் நான் பண்ணுற செலவு எனக்குக் கட்டுப்படியாவும்….
வேணா..பூஜைக்கு ரெண்டு பலகை செய்து கொடுக்கறேன்…வெச்சுக்கங்கையா.…ஏதோ…என்னால முடிஞ்சது …
இப்ப….என்ன சொல்றீங்களோ….சொல்லுங்க.
நானும் பார்த்து பார்த்து….ஏமாந்து போயிட்டேன் கந்தசாமி……இந்த வருஷமாவது…இந்த வருமாவது..இது வருமா ன்னு நினச்சு…
நினச்சே…வருஷங்கள்  தான் ஓடுதே… தவிர….ஒண்ணையும்.. காணோம்..சும்மா தண்டத்துக்கு தண்ணி ஊதிக்கிட்டு…..!
ஏனுங்க…..பச்ச மரம்…..பறவைங்க கூடு கட்டியிருக்கு,  அம்சமா நிழல் தருது…அப்படியிருந்தும்..மாமரத்தை…
ஏன்யா ..வெட்டசொல்றீங்க?….என்றாவது ஒரு நாள் காய்க்கும் இது….என்று இழுத்தான் கந்தசாமி….
அதெல்லாம் தொல்லை தான்..இத்தனை வருஷமாக் காய்க்கலை…இனி எங்கே…காய்க்கப் போகுது…
ஒரே பறவைங்க கூச்சலும்….எச்சமும்…இடத்தை நாசம் பண்ணுதுங்க……நிலத்தைப் பூரா நிழல் அடைச்சி.வேற எந்த
தொட்டிச்செடிக்கும்  சூரியனைக் காட்ட மாட்டேங்குது….வேரு மட்டும் காம்பௌண்டு சுவத்தையே தூக்கிடும் போல..இருக்கு ….
அங்கன வரைக்கும் போய்ட்டுது….பாரேன்,,,,,அடுத்த மழைக்கு சுவரு அம்பேல் தான்….இந்த மரத்தோட வேரே……
காம்பௌண்டு சுவத்தைத்  தூக்கிறும்….
அதான்…கந்தசாமி……சும்மா நானும்… மரமுன்னு  வளர்ந்து நின்னாப் போதுமா..?  இந்த எடத்துல  வேற மரத்தையாவது
நட்டு வைக்கலாம்….அதுவாச்சும் காய்கட்டும்….மரத்தை வெச்சமா…பழத்தைத் தின்னமான்னு இருக்கணும்…அத்த  உட்டுட்டு …..
இன்னும் எத்தனை காலம் தான் காத்து கெடக்கறது…பூவிடும்…பிஞ்சுவிடும்னு…”
அதுகென்ன சாமி…..பண்றது….நீங்க மரத்தைப் பத்தி சொல்றீங்க…..எங்க சாதி சனங்க…..கண்ணாலம் கட்டி புள்ள
பொறக்கலைன்னா…அடுத்த வருஷமே பொஞ்சாதியை வெட்டி உட்டுட்டு  வேற கண்ணாலம் கட்டிகுவாங்க நம்ப பசங்க.
ஏம்பா….இது ரொம்ப அநியாயம்.!..புள்ள இல்லைன்னா… அதுக்கு அந்தப் பொண்ணு தான் காரணமா? புருஷனுக்கு இதுல பங்கு இல்லையா..
என்ன..? இதோ இந்த மூணு வீடு தாண்டி….ஒரு மாப்பிள்ளை இருக்காரு…அவரு இப்படித்தான்….வாரிசு இல்லைன்னு காரணம்
சொல்லி கட்டினவளை விவாகரத்து பண்ணிட்டு….இப்போ…. உள்ளதும் போச்சுடா…. நொள்ளக் கண்ணான்னு….மோட்டு வளையப்
பார்த்துட்டு உட்கார்ந்திருக்காரு. இவனுக்கெல்லாம் இனி யாரு பொண்ணு கொடுத்து……அவன் நினைச்சது நடந்து…ம்ம்ம்ம்…..!
சரி அத்த  விடு…நம்ம கதைக்கு வருவோம்….சொல்லிக் கொண்டிருக்கும்போதே….
கேட்டின் முன்னே ஆட்டோ  வந்து நிற்கவும் .அதிலிருந்து வித்யா இறங்குவதைப்  பார்த்ததும்…..வாசுதேவனுக்கு..
“அட…வித்யா….”  மகளைப் பார்த்த சந்தோஷத்தில்…”வாம்மா வித்யா…தனியாத் தான் வந்த்ருக்கியா…ஒரு
போன் பண்ணியிருந்தால் ஸ்டேஷனுக்கு நான்   வந்திருப்பேனே…..!
ஆமா…என்ன திடீர்ன்னு..சொல்லாமல் கொள்ளாமல்….!
ஒருவேளைத் தாய்மை அடைந்து விட்டாளா? முகத்தில் ஏனோ மலர்ச்சி தெரியவே இல்லையே….?
அதைத் தானே நாங்களும்  இத்தனை வருஷங்களா…எதிர் பார்த்துண்டிருக்கோம் வாரிசு  வேணும்…வாரிசு வேணும்னு….!
நினைக்கும்போதே மனதுக்குள் ஒரு குளிர்ச்சி…வித்யாவின் கையில் குழந்தையோடு மனக்கண்…படம்பிடித்தது அவசரத்தில்.
ஆட்டோக்காரன் தூக்க முடியாமல் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வீட்டின் உள்ளே வைத்து விட்டு வித்யாவிடம் காசை வாங்கி கொண்டு கிளம்ப..
கேட்டை சார்த்திவிட்டுத் திரும்பிய வித்யாவிடம்…நீ உள்ளபோ..நான் ..இவனை அனுப்ச்சுட்டு .வரேன்…..
அம்மா உள்ளதான் இருக்கா…சொன்ன படியே….ஜெயந்தி….ஜெயந்தீ …..யாரு வந்திருக்காப்…. பாரு….!
ஜன்னல் வழியாக்  குரல் கொடுக்கவும்….ஜெயந்தியும் உள்ளே நுழைந்த வித்யாவும் ஒருவரை ஒருவர்  கட்டிக் கொண்டு
குதூகலமாய்  குசலம் விசாரித்தது….கேட்டு வரைக்கும் கேட்டது.
சரிப்பா…..கந்தசாமி….நீ நாளைக்கு காலைலயே வந்துடு…நீ கொடுப்பதைக்  கொடு..எனக்கு இந்த மரம் கீழ விழனும்…வேலை முடியணும்
அவ்வளவு தான்…..மக..இப்பத்தான்…. ஊர்லேர்ந்து…வந்திருக்கு….நான் போகணும்….நீயும்  இப்போக் கிளம்பு..காலைல மறக்காமல் வந்துடு
என்ன…கொஞ்சம் பொறு…ஜில்லுன்னு மோர் தர சொல்றேன்….குடிச்சுட்டு போ….போகும்போது மறக்காமல் கேட்டைப் மூடிட்டுப்  போப்பா..!
சரிங்கையா…..கண்டிப்பா ஒரு பத்து பத்தரைக்கு வந்துடறேன் ….ரெண்டு மணி நேர வேலை தான்…மரத்த வெட்டி வீழ்த்தி இடத்தைச் சுத்தம்
பண்ணிக் கொடுத்திடறேன்…….என் வேலை எப்பவுமே சுத்தமா இருக்கும்.
சொல்லிவிட்டு இன்னொரு முறை  மாமரத்தை மேலிருந்து  கீழ் வரைக்கும் பரிதாபப்  பார்வை பார்த்து விட்டு….
தான் போட்ட கணக்கு சரியானது தான் என்ற திருப்தியோடு…தன் பழைய மொபெட்டை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.
மொதல்ல…புதுசா ஒரு ஸ்கூட்டர் வாங்கணும்……..கந்தசாமி மனசு… கோட்டைக்கு அஸ்திவாரம் போட்டது….!
ஈயச்சொம்பிலிருந்து ரசம் கொதிக்கும் வாசனை … இங்கே வா…இங்கே வா…என்று வாசுதேவனை…சமையல் அறைக்கு அழைத்தது.
ஜெயந்தி வைக்கும் ரசமா..இல்லை ஈயச் சொம்பின் மகாத்மியமா..ஒரு ..பட்டிமன்றமே நடத்தலாம்….!
எப்பவும் ஒரே மாதிரி அபார ருசியில் ரசம் …சாப்பிட்ட பிறகும் கூட  கம கமன்னு ரச வாசனையோடு கை மணக்கும்….
வித்யா…வித்யா….அழைத்தபடியே..சமையலறை நோக்கி நடக்க அங்கே…அம்மாவும்…..பெண்ணும்….ஏதோ…பேசிக்கொண்டிருக்க..
வித்யாவின் கையில் ஆவி பறக்க காபியைப் பார்த்ததும்….
ம்ம்ம்….வித்யா….இனிமேல்….நான் காப்பி…. காப்பி …..ன்னு கரடியாக் கத்தினாத்  தான் காப்பி கிடைக்கும்….
அதான் தெரிஞ்ச விஷயமாச்சே….அம்மா…. பொண்ணு …. சுவாரசியத்தில் என்னை யாரு கவனிக்கப் போறா…?
ஏற்கனவே…உன்கிட்டேர்ந்து போன் வந்தா மணிக்கணக்கா பேசி நான்  ஒருத்தன் இருக்கறதையே மறந்துடுவா…..
இப்போ…பக்கத்துலேயே இருக்கியா …தலை கால் புரியாது உங்கம்மாக்கு…..!
நல்ல நாளிலேயே….. நாழிப் பால் தான்…இப்போ குட்டி வேற போட்டிருக்கு…..வாசுதேவன் தனக்குரிய பாணியில் மனைவியை…கேலி செய்ய….
போதும் ….. போதும்…….இதுக்கொண்ணும் குறைச்சலில்லை….நேரங்கெட்ட நேரத்தில் என்னைக் கேலி பண்றதே…
உங்களுக்கு வேலையாப் போச்சு……இந்தாங்கோ காப்பி…..ஜெயந்தி நீட்டிய காப்பியை வாங்கிக் கொண்டே வாசுதேவன்…..
அப்புறம் ….வித்யா…..ரொம்ப சந்தோஷம்…..கடவுள் கண்ணைத் திறந்துட்டார்….நேர்லயே சொல்லலாம்னு வந்துட்டியா …
நல்ல பொண்ணும்மா நீ ஒரு போன் பண்ணி  சொல்லிருந்தாப் போதுமே நானே  வந்து பார்த்து அழைச்சுண்டு வந்திருப்பேனே ….
எல்லாரும் சௌக்கியமா?……மாப்பிள்ளை சௌக்கியமா?  சம்பந்தியப் ஒரு நடை வந்து பார்த்துட்டு வரணும்னு போன வாரம்
தான் நினைச்சோம்..நல்ல வேளை…நீயே வந்துட்ட….
வித்யா என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று விழித்தால்….முகம் திரும்பியது….உடல் நடுங்கியது….அப்பா…வந்து…
நீங்க நினைக்கிறார்போல….அப்படியெல்லாம்…. வார்த்தை வந்தும்  வராமல்…முழுங்கினாள்.
ஜெயந்தி….குறுக்கிட்டு……வித்யா..நீ போய் குளிச்சுட்டு வா…சீக்கிரம்…சேர்ந்து சாப்பிடலாம்..
வித்யா அங்கிருந்து சட்டென்று  நகர்ந்ததும்…..
ஏன்னா…கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல்…கொழந்தை வந்ததும் வராததுமா….. நீங்க வேற…..?
அவளே… நொந்து போய் வந்திருக்கா…..நீங்க வேற எரியற நெருப்பில் நெய்யை  விட்டுண்டு….சித்த .. சும்மா இருங்கோ….
ஜெயந்தியின் பீடிகை…!
ஆமா…கந்தசாமிய நாளைக்கு என்ன வேலையா… வர சொல்லிருக்கேள்…?
அதொண்ணுமில்லை..வாசல்ல சும்மா  நிக்கற மாமரத்த எடுக்கச் சொல்லிருக்கேன்….நாளைக்கு வரேன்னான்….
போன வாரமே உன்கிட்ட சொன்னேனே….மறந்துட்டியாக்கும்…நியாபக மறதில…..உன்னை யாராலும் அடிச்சுக்க முடியாது….
ஒ…..அதுவா..ஆமாமா ..மறந்துட்டேன்….ஆனால்……இப்ப அது  வேண்டாம்னா…..!
என்ன சகுனமா…? இல்ல….சம்பிரதாயமா….?.இந்த வருஷமும் மரம் தப்பிச்சுடுத்தா…! அது பாட்டுக்கு அது…இது பாட்டுக்கு இது….
அத்த எடுத்துட்டு…வேற வைக்கலாம்னு தான் சொன்னேன்…கந்தசாமிட்ட….
இல்லன்னா…..வித்யா  வந்த விஷயமே  வேற…..
வேற எதுக்காம்….புதுசாக் கார் வாங்கப் போறாரா மாப்பிள்ளை….? இல்லாட்டா…….மாடி எடுத்துக் கட்டப் போறாளா?
எனனோட பிச்செட் டேபாசிட் பணத்துக்கு  கத்தி வந்துடுத்துன்னு சொல்லு….!
சித்த சும்மா இருக்கேளா…? வித்யாவோட காதில் விழுந்து வைக்கப் போறது….உங்க தத்துப்பித்து உளறல்….
குழந்தை ஏற்கனவே மன வருத்தத்தோட இருக்கா பாவம்…..
அப்படி என்ன தான் வருத்தம்…அதைச் சொல்லேன் முதல்ல…!
அதானே…பொண்ணாப் பொறந்திருந்தாத் தெரியும்…உங்களுக்கெங்கே….புரியும்…
எல்லாம் எங்களுக்கும்  புரியும்….ஒரே பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுமே தலை நரைச்சுப்போச்சே……
அதிலேர்ந்தே தெரியலையாக்கும்…!
சரி சரி…..எனனோட மல்லுக்கட்டறது…போதும்…..சாப்பிட வாங்கோ…பசிக்கப் போறது…சொல்லிக்  கொண்டே அப்பளத்தை பொரித்தாள் ஜெயந்தி.
சரி வித்யா எங்கே..? இன்னுமா குளிச்சிண்டிருக்கா..?
இதோப்பா…நான் இங்கேருக்கேன்…..மாமரத்தின் அடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஈரத்தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.
வாசுதேவன் மகள் அருகில் சென்று…..உனக்கென்ன பிரச்சனைம்மா…  இப்போ….?
அப்பா…சின்ன வயசில் நான் வைத்த மரம் தானேப்பா இது…?.எவ்ளோ பெரிசா வளர்ந்து நிற்கறது  பார்த்தேளா?
இந்த வீட்டுக்கு இந்த மரம் தான்ப்பா…..அழகு….
பேச்சை  மாத்தாதே…நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு….என்ன ப்ராப்ளம் உனக்குன்னு கேட்டேன்….
இல்லப்பா… அது வந்து….அப்பா….சாப்பிட்டுட்டு பேசலாமே….நீங்க தானே சொல்லிருக்கேள்…ஒரு பிரச்சனையை பற்றி
பேசும்போது சாப்பிடற நேரத்திலையோ, தூங்கப் போற நேரத்துலையோ பேசப்படாதுன்னு…..
சரி…அப்போ வா….சாப்பிடலாம்…அம்மாவும் சமையல் எல்லாம் ரெடி பண்ணியாச்சு…
இதோப்பா…சுவாமி நமஸ்காரம் பண்ணிட்டு வந்துடறேன்…..பக்கத்தில் இருந்த செடியில் இருந்து நாலு செம்பருத்தி
பூவைப் பறித்துக் கொண்டு உள்ளே செல்கிறாள் வித்யா..
வாசுதேவன் சோபாவில் ஆயாசமாக  அமர்ந்து ம்ம்…அப்பறம்…அதான் சாப்டாச்சே…இப்போ சொல்லு…
ஜெயந்தி… நீயும் வந்து உட்காரு…மீதி வேலையை அப்பறமாப் பார்த்துக்கோ…..அப்படி என்ன தான்
நாள் பூரா சமயலறையில் வேலை..  இருக்குமோ…? எப்பப்பாரு பூனை மாதிரி அங்கேயே உருட்டிண்டு இருப்பா….
ஜெயந்தி அவசர அவசரமாக ஈராக் கையை புடவை தலைப்பில் துடைத்தபடியே வந்து அமர்கிறாள்.
ஜெயந்தி….வித்யாவின்…  முகத்தைப் பார்த்தாள்…..அதில் எனக்கு சொல்லத் தயக்கம்…நீயே ஆரம்பி..என்று எழுதியிருந்தது….
இல்லன்னா..அங்க…. இவாத்தில் பெரிய சண்டையாம்…கல்யாணம் ஆகி ஆறு வருஷமாச்சு..இன்னும் இவ உண்டாகாம இருக்காளாம்…
அவாளுக்கு ஒரு வாரிசை பெத்துக் கைல கொடுக்கலையாம்….இனியும் பொறுமையாக் காத்திண்டு இருக்க முடியாதாம்…அவாளால.
அதனால் நம்ப சம்பந்தி மாமியோட தம்பி பெண்ணுக்கு நம்ம மாப்பிள்ளையை மறுபடியும் கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்னு
யோசிக்கறாளாம்…அதான்…வித்யா கோவிச்சுண்டு பெட்டியத் தூக்கிண்டு வந்து நிக்கறா….வந்து இத்தனை நேரமாச்சு….
இப்போ வரைக்கும் ஒரு போன் கூட வரலை  மாப்பிள்ளைட்டேர்ந்து…..அதான் கவலை… ஜெயந்தி சொல்ல..சொல்ல…
வித்யா தலையை குனிந்து கொண்டு….அவளது கண்ணீர்த் துளிகள் அவளது கால் பாதத்தில் பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தது.
இதென்ன… கூத்து….இப்படிக் கூடவா..மனுஷா இருப்பா…? நீ அழாதேம்மா…..எவ்வளவு திண்ணாக்கம்..இருந்தா…நீ உயிரோட இருக்க..
மாப்பிள்ளைக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு உன்னண்ட  சொல்லியிருப்பார்….சம்பந்தி மாமி…!
எனக்கு…. வர… ஆத்திரத்துக்கு அவா மேல கேஸ் போடலாம்….கோர்டுக்கு இழுக்கலாம்…..சொல்லிக்கொண்டே ….
வாசுதேவனின் பார்வை வாசல் வரைக்கும்  சென்றது…அங்கே..அவர் பார்வைக்கு மாமரம்…காய்க்காத மாமரம்..!
மேற்கொண்டு எதுவும் பேச முடியாதவராக…..நேற்று கந்தசாமியிடம் இவர் சொன்ன வார்த்தைகள்….மனதோடு எதிரொலியாக…..
“சும்மா நானும்… மரமுன்னு  வளர்ந்து நின்னாப் போதுமா..?  இந்த எடத்துல  வேற மரத்தையாவது வைக்கலாம்….அதுவாச்சும் காய்கட்டும்….
மரத்தை வெச்சமா…பழத்தைத் தின்னமான்னு இருக்கணும்…அத்த  உட்டுட்டு ….. இன்னும் எத்தனை காலம் தான் காத்து கெடக்கறது…பூவிடும்…பிஞ்சுவிடும்னு…”
வந்து விழுந்தது. தன்னிச்சையாக எழுந்து நடந்தார்.
கூடவே….தனது நண்பன் ராஜகோபாலன் இதே காரணத்தைச் சொல்லி மலட்டு  மனைவியை விவாகரத்து செய்தது
மனதில் நிழலாக வந்து போனது….கல்யாண சந்தையில் இது சகஜம் தான் என்றாலும் இந்த ஒரு விஷயத்தால் தான்
இவர்கள் இருவருக்குள்ளும் வாய்த் தகராறு வந்து பேச்சு வார்த்தை நின்றுவிட்டது.
இன்னும் அவனுக்குப் பெண் தேடும் படலம் நடக்கிறது.
இப்போது தான் புரிகிறது…எத்தனை பெரிய பாவம்…செய்திருக்கிறான்..என்று.
தலைவலியும்…திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்னு…..சரியாத் தான் சொல்லிருக்கா..
மாமரத்தருகே…வாசுதேவனின் கைகள்…மரத்தை வாஞ்சையாய் தடவ…வித்யாவின் தலையைத் தடவுவது போல் உள்ளம்  உணர்ந்தது..
என்னை மன்னிச்சுக்கோ…மனம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டது… அருகில் வித்யாவும்..ஜெயந்தியும்….இருப்பதைக் கூட உணர முடியாமல்….
தனது செய்கையை நினைத்து கூனிக் குறுகினார் வாசுதேவன். இத்தனை ஆண்டுகள்… தான்… ஆசை ஆசையாய் வளர்த்த மரம்…
அதை வேரோடு வெட்டச் சொல்ல எனக்கு  எப்படி வந்தது மனம்…..?
இன்று இதே நிலையில் ..அவர்…மகள் இன்னொருவர் வீட்டில்…வேண்டாத …காய்க்காத மரமாக….! வெட்டி எறியத் தயாராக..!
காய்த்த  மரம்  தான் கல்லடி படும்னு சொல்வா….காய்க்காத மரத்தில் கோடாலியே….படும்னு சொன்னவனாயிட்டேனே….
அது தரும் நிழல் கூடவா  என் மனதில் தோன்றவில்லையே. பகவானே….எப்பேர்பட்ட பாவம்…. செய்ய இருந்திருக்கேன்.நான்.
என்  கண்ணைத் திறந்து விட்டாயே….ஊமை மனம்.. கதறியது.
அதன் பின்பு…. வீட்டில் ஒரு அமைதி….அவரவர் மனதில் எழுந்த போராட்ட எண்ணங்கள்…அடுத்தது என்ன செய்வது
என்ற கேள்விக் குறியாகவே….????…இரவும் வந்தது. உறக்கம் தான் மூவருக்கும் வரவில்லை. எப்போது விடியும் என்று வித்யா காத்திருந்தாள்.
எப்பவும் போல் வித்யா…. காலை அம்மாவுக்கு கூடமாட வேலைகளில் உதவி செய்து விட்டு…துவைத்த துணிகளை
கொடியில் காயப் போட மொட்டை மாடிக்கு எடுத்து செல்கிறாள்…..துணிகளை உலர்த்திவிட்டு மனதிற்குள்..எவ்வளவு பசுமை இந்த மரம்….
அடர்த்தியா…செழுமையா.நான் நட்ட மரம் இது….நினைத்த மாத்திரத்தில் நெஞ்சம் பூரித்தது வித்யாவுக்கு. ..பச்சைக் கிளிகளின் .கீச்..கீச்..ஒலி
கேட்டு….அருகே சென்று மரக்கிளையை பார்க்க…அங்கே…அவளுக்காக இன்ப அதிர்ச்சி காத்திருந்தது….  .மாமரத்தின் உச்சி மரக்கிளையில்……
கொத்து கொத்தாக மாம்பூக்கள் ….இது போதாதா…அந்த வீட்டின் சந்தோஷத்திற்கு.
வித்யா துள்ளிக்கொண்டு படி இறங்கி…கடவுளே…என் கண்களையே என்னால் நம்ப முடியலையே…! .அம்மா…அப்பா….இங்க கொஞ்சம் ஓடி வந்து
பாருங்கோளேன்..இந்தக் கண்கொள்ளாக் காட்சியை…..நம்ம மாமரம்….பூத்திருக்கு..! குரலில் குதூகலம்..!
நிஜம்மாவா….! எங்கே…எங்கே…..பார்த்தே…நீ…? அம்மாவும் அப்பாவும் கோரஸாக,,,!
ஆமாம்மா…உச்ச்சிக் கிளையில் கொத்துக் கொத்தாப் பூத்துக் குலுங்கி இருக்கும்மா…சொல்லும்போதே….
வித்யாவின் முகம் ஆயிரம் வாட்ஸ்…பல்பு எரிவது போல் ஒளிர்ந்தது.
வாசுதேவன்…ஓடிச் சென்று மரத்தை கட்டிக் தழுவிக்கொண்டார்….பிறகு அவரும்……ஜெயந்தி….வித்யாவுடன் மாடிக்கு
ஓடினார்…
“கவலைப் படாதே…” இன்னும் பத்தே மாதங்களில் இதேபோல்…வித்யாவுக்கும் குழந்தை  பிறக்கும்”அசரீரியாக மரம் ஆசீர்வாதம் செய்வது போல்…..
ஆடியது…மாமரம்…….ஆனந்தக் கண்ணீரோடு வாசுதேவன்.
“காய்க்காத மரமும் ஒருநாள் காய்க்கும்..கந்தசாமி  சொல்லியது அவரது நினைவுக்கு வந்தது..
பாவம்…கந்தசாமியின் கனவு தான் இன்று பலிக்கப்போவதில்லை..
அதே நேரத்தில்…வாசலைத் தாண்டி…டும்..டும்..டும்…என  கெட்டிமேள சத்தத்தோடு நாதஸ்வர இசையும் கலந்து கடக்க….
ஆர்வத்தோடு….வாசுதேவன் கீழே எட்டிப் பார்க்க…அங்கே..ஓர் அதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு.
அங்கே…. மாலையும் கழுத்துமாகத்  தனது வயோதிக நண்பன்  ராஜகோபாலன்…அவனருகே இளவயதுப் பெண் புதுமனைவியாக…
தம்பதியாக…சுற்றத்தோடு கோவிலில் கல்யாணம் முடித்துக் கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

செவ்வாய், 13 மார்ச், 2012

பூதக்கண்ணாடி



வழித்துணையாய்...
நடந்தேன்..
வாழ்க்கைத் துணையாய்
மாலையிட்டாய்..

சாயும் தோளில் 
பாரம் தந்தேன்..
சுமைதாங்கியாய்
ஏற்றுக் கொண்டாய்..

பஞ்சு இதயத்தில்
பாசம் வைத்தேன்..
நெஞ்சு கனக்கிறதென்று  
அழுது சொன்னாய்...

கண்ணாடி இதயங்களில் 
கறை இருக்காது..!
நம் அகமும்..புறமும்...
காணக் கிடைத்த
மாயக்கண்ணாடி 

உன்னில் நானும்
என்னில் நீயுமாய்..
தெய்வம் தந்த
இதயக்கண்ணாடி...!

--------------------------------------------
ஜெயஸ்ரீ ஷங்கர்..

சிதம்பரம்

தங்கக் கூடு.

எழில் வளர் கூடு

என் உயிர் கூடு
காதலைத் தாலாட்டி
காலத்தை நீட்டிடும்..

சொந்தங்களை சீராட்டி..
சிரிக்கும் வானம் பாடியாய்
வளர் கூடு வாழும்...
அன்பு கொண்டு எதிலும்..

முழங்கை நீட்டிடும்...
வாழும் வரை வளரும்..
உயிர் கூடு..வலையில்..
சிக்கிய பறவையாய்...!

என்னுள்ளே..சிறகொடிந்து..
வீழ்ந்தாலும்...சுதந்திரமாய்..
விண் எகிறும் ..கற்பனையில்..
உயிர் பறவையிது..

தங்கும் கூடு....
தாங்கும் கூடும்..!
தங்கக் கூடு...!

ஜெயஸ்ரீ ஷங்கர்.

வெண் சங்கு..!




நெஞ்சில் கொள்ளை ஆசையாய்..
சிறுக சிறுக நான் சேர்த்த 
பொக்கிஷங்கள் எல்லாமும்..
உணர்வுகள் சுமந்த என் உயிர்..!
மண் படிந்த சிப்பிகள்..
பாசி படிந்த வெண்  சங்குகள்..!
கடல் நுரை பூக்கள்..!
நட்சத்திர மீன்கள்..!
கண் முழிக்கும் சோழிகள்..!
ஹரித்வாரில் அள்ளிய
கூழாங்கற்கள்...!
வண்ணத்துப் பூச்சியின்
ஒற்றை சிறகின் ஓவியம்..
"குட்டிபோடும்" ஆசையில் 
சேர்த்த ஒற்றை  மயிலிறகு..
"மஹா போதிமரத்தின்"
காய்ந்த ஒற்றை இலை...
காக்கா பொன்னு...
கலர் கலரா மண்ணு...
நானிருக்கும் வரை 
என்னோடிருக்குமென
சேர்த்து வைத்த சொர்கங்கள்...
உன்னவளாய்ப் போனபின்பு..
சொர்க்கம் நீஎன்றானபின்பு..
என்னையே  அஸ்தியாய் 
கரைத்துவிட்டேன்....
நீலக் கடலில் 
என் உயிர் கொட்டி...
என்றேனும் ஒருநாளில் 
உன் பாதங்கள் கடலை 
நனைக்கும் வேளை....
பாதத்தில் சிக்குமோ...?
வெண் சங்கு..!
========================

கலங்கரைவிளக்கம்..



நீலக் கடல் அலையில்...
கம்பீரமாய்...தவழ்ந்து  வரும் கப்பல்....
பவனி வர..அதனருகில் 
துவண்டு எழும் 
கட்டுமரம்..துணை வர...
இரண்டும் சேரத் 
துடித்ததென்னவோ....
கரை...ஒன்றில் தான்..
பெருங்கடலில்...பெரும்புயலாய்....
காற்று..சுழன்றடிக்கும் நேரத்தில்..
கப்பல் மட்டும்
செல்லும் வழி தவறி 
திசை மாறிப் போனதம்மா..
கலந்கரையும் கப்பலைக் 
காப்பாற்ற இயலாது
கண்ணடித்து தன் 
கடமையை புரிந்தது
என்றாலும்...
பெருங்காற்றும் சுழலும் 
ஒன்று சேர்ந்து 
வந்தாலும் நேர்வழியில் 
பாதை மாறா 
கட்டுமரம்...கரை வந்து 
சேர்ந்ததுவே...தனிமையில்...!
====================================
ஜெயஸ்ரீ ஷங்கர்...

இன்னுமா....அங்கிருக்கிறீர் ..?!!


Suprabhathams 
(எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாள்..)


குரலுக்குள் குயிலுக்கு 
இடம் கொடுத்த பூங்குழலி...
இனிமையை தேனுக்குத்
தானம் தந்த வேணியோ..

ராகத்திற்கே உமதுருவம் 
ஈந்த  திரிபுரசுந்தரியே
ராகமாலிகையை விதையாய் 
தெளித்த ரட்சகியோ ?

சுப்ரபாதமும்....சகஸ்ரநாமமும் ....
குறையொன்றுமில்லை ...
உருகலும்..
பஞ்சரத்னத்தின் மருகலும்..

கங்கையே இந்த நங்கையை 
இறங்கி வந்து ஆராதிக்க
பெண்மைக்கு சித்திரச்
சின்னமாய் அச்சுப் பதிக்க..!

இசைராஜ்ஜியத்தின் 
என்றும் இளவரசியாய்..
தம்பூராவோடு மீராவாய்...
வீணையோடு வேணியாய்..

உயர்ந்த நட்சத்திரமாய்....
வான்மழை ஏற்றிய 
அணையாத 
குத்துவிளக்கு நீங்கள்..!

மூடிய விழிகள் 
இசையைப் பார்க்க ஏகமாய்....
மூக்குத்திக் கண்கள் 
உலகைத் திறக்க..கானமாய்...

கோடியில் முதலாய்...
முதலிலும் முதலாய்..
வரையாத உயிரோவியம்...
எழுதாத இசைக் காவியம்..

குறுந்தகடில் மௌனமாய் 
ஒளிந்திருக்கும் விநோதினி...
விடியலில் கோபுரத்தின் 
உச்சியில் கேட்கும் ஹம்சத்வனி....

இசையை உணவாய்...ஏற்று 
ஜீவித்த உங்கள் இடம் 
இன்னும் வெற்றிடமாய்...இங்கே...
யாராலும் நிரப்ப முடியாமல்..!

இசைக்கே அர்ப்பணித்த 
உமதுயிர் எப்படிப் ..பாடாமல் 
இருக்குமோ சொர்க்கத்தில்...!
அடுத்த பிறப்பெடுத்து 
எட்டிப் பாருங்கள்....

இங்கே..மீண்டும்..
உமது குரலுக்காய் 
காத்திருக்கும்...மேடைகளும் 
உருகும் மனங்களும்..


============================
ஜெயஸ்ரீ ஷங்கர்....
சிதம்பரம்.

ஆலமும் போதிக்கும்..


ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்.
போகும் வழியில்
புரிந்து போனது..
சமுதாயம்..ஜனநாயகம்..
சமத்துவம்..கற்றுத்தந்தது..
வழியிலொரு ஆலமரம்..!
சுமை தாங்கும்
நிம்மதியில் தான்..
எத்தனை விழுதுத்தூண்கள்..!
மரத்தின் விழுதுகளா…?
அத்தனையும் மதவிழுதுகள்…
தாங்குகிறது இந்தியா..!

நடுப்பரப்பை பிடிக்கவென்றே…
பறவையாய் விரித்தது கிளைகள்..
அத்தனையும் சாதிக்கிளைகள்…
விழுதுகளை தாங்குமா….கிளைகள்..?

மரத்தின் நடுமுதுகில்…
எதையோ…எதிர்த்து
கொத்திவிடும் மரங்கொத்தி…
பொந்துக்குள்ளே .புதையலாய் நாகம்..!
ஊரஊர தேயாத பாதை நீ…!
கலவரக் கட்டெறும்பின்
கட்டாயப் படையெடுப்பு..!

கிளைகொன்றாக…
வண்ணக் கொடிகள்..
தாவும் குரங்குகள்
சண்டையிட்டு விளையாட
ஊழல் அரசுகள்…
வந்துபோன அடையாளங்கள்..!

இருக்கும் இடத்தில்
தனக்கென கொஞ்சமாய்
கூடு கட்டி வாழ்ந்த
பறந்த பறவைகளின்..
நினைவுச் சின்னங்கள்…
ஆன்மீக அடையாளம்..!

வழிப்போக்கரின் கையகலப்
பொட்டலம் விரித்துப்
பசியாற்றி..போகும்
பாதசாரிகளின் இளைப்பாற்றும்
மெத்தை நிழல்….!

நீ… தென்றலுக்கு
இடம் கொடுத்து
மோன தவமிருந்தாலும்…
உன்னில் அமர்ந்து..நித்தம்..
தவம் கலைக்கும்
மோகக் கிளிகள்..!
======================================




கானல் நீர்...


டிடிங்….டிடிங்…..டிடிங் ….அழைப்பு மணி அடித்தது….
யாராயிருக்கும்…..? மனதின் கேள்வியோடு…கதவைத் திறந்தேன்…
நீல வண்ண சுடிதாரில்..அழகி….பத்மா நின்று கொண்டிருந்தாள்…ஆனால்….அவள் முகம்….வழக்கத்துக்கு மாறாக வாடி இருந்தது….
இதே பிளாட் ல் ஐந்தாவது மாடியில் வசிக்கும் பத்மா…இந்த நேரத்தில் எதற்காக வந்திருப்பாள்.? .
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வெறும் வாய்களுக்கு மெல்லும் அவல்….அவள்… தான்..!
உள்ளே வா…பத்மா..
இல்ல ஆன்ட்டி..வெளியில் கிளம்பறீங்க போலத் தெரியுது…
ம்ம்…வாக்கிங் போகத் தான்……கிளம்பியிருக்கேன்..
சரி…போயிட்டு வாங்க….நான் போறேன்…!
ம்ம்ம்….சொல்லு பத்மா…என்ன விஷயம்?
அவள் தயங்கினாள்……திரும்பிப் போக எட்டு வைத்தாள்.
உடனே நான்…இதோ… வாக்கிங் கிளம்பிண்டு இருக்கேன் ..வந்ததும் உன்னைக் கூப்பிடறேன் …..வா…என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டேன்…
பத்மாவின் முகத்தில் பேயறைந்தது போல கருமை நிழல்…
அந்தி சாயும் மாலைப் பொழுது…..சூரியன் தனது வேலையை முடித்துக் கொண்டு அஸ்தமனமாகிக் கடலில் குளிக்கத் தரை இறங்கியாச்சு….இன்று பௌர்ணமி வேறு…முழு நிலவு…சிங்காரமாய் சிரித்துக் கொண்டு வானத்துச் சாளரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறது…பாண்டிச்சேரி கடல் காற்றுக்கு கேட்கவா வேண்டும்.?….அந்த அழகிய ஊருக்கு மேலும்….அழகு சேர்ப்பது அந்தக் கடலும் தான்….!
எப்போதும் போல் நான் மாலை வாக்கிங் சென்று விட்டுத் திரும்பும் வேளை…வீட்டை நோக்கி வரும்போது நிலாவைப் பார்க்க மேலே தலை உயர்த்திப் பார்க்கிறேன்…..சூர்யா டவர்ஸ்..மின்னும் எழுத்துக்களோடு .மோகன் நகரின் பிரம்மாண்டமான ஐந்து மாடி குடியிருப்பு….மயங்கும் வேளையிலும் வைரமாய் மின்னிக் கொண்டிருந்தது……வெள்ளை வெளேரென்று….!
அப்படியே……அங்கு…. நான் கண்ட காட்சி என்னை ஒரு நிமிடம் நிலை தடுமாறச் செய்தது….நீல வண்ண உடையணிந்த பெண்…..மேலிருந்து கீழே எட்டிப் பார்ப்பது போல்…..உடனே எனக்குப் பொறி தட்டியது..யாரிந்தப் பெண்…..ஒ….பத்மா….இவள் இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாள்? …….நான் வருவதற்குள்………நான் எண்ணி முடிப்பதற்குள் … அவள்…காற்றைக் கிழித்துக்கொண்டு அசுர வேகத்தில் தரையில் மோத..விழுந்து கொண்டிருந்தாள். தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள் என்று நான் .கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை…
..
இப்போது என் கைவசம் மொபைல் கூட எடுத்து வரவில்லை…யாராவது காப்பாற்றுங்களேன்…….. யாராவது காப்பாற்றுங்களேன்……என் குரல் எனக்கே கேட்கவில்லை….தொண்டைக் குழியில் ஏதோ அடைப்பது போல்…நான் சுதாரிப்பதற்குள்….அது…. நடந்து விட்டது. காலடியில் தொப் பென்று சுட்டு வீழ்த்திய பறவை போல் வந்து விழுந்தாள் பத்மா…. சிமெண்ட் தரையில் பீறிட்டுப் பரவி வழிந்தோடியது ரத்த வெள்ளம்…நடுவில் நீல வண்ணம் மெல்ல மெல்ல ரத்தத்தில் தோய்ந்து சிகப்பாக மாறிக் கொண்டிருந்தது….அவளது குத்திட்ட பார்வை…அவள் பறந்து போனதை சொல்லி விழித்தது. என் இதயம் துடிக்க மறந்து “திக்” கென உறைந்து நின்றது….
நான் சென்று வந்த இந்த ஒரு மணி நேரத்திற்குள் அவளுக்கு அவ்வளவு அவசரமா? இதற்குத்தான் நான் போகிறேன்… என்று என்னிடம் சொன்னாளா? நான் வரும் வரைக்கும் காத்திருக்கக் கூடாதா? பத்மா…உன் இறுதி நொடியை நான் பார்த்தும் என்னால் உன்னைக் காப்பாற்ற முடியவில்லையே….என் இதயம் சுக்கு சுக்காக நொறுங்கிக் கொண்டிருந்தது..என்ன செய்வேன்…? உன் முடிவுக்கு நானும் ஒரு காரணமாகி விட்டேனே..என என் மனசாட்சி குற்ற உணர்வில் என்னை வாட்டத் துவங்கியது…
இதோ…உன்னைச் சுற்றி சாக்பீசால் கோடுகள்…நீ விழுந்து அழிந்த இடத்தைச் சுற்றி ரத்தக்கறையோடு சேர்ந்து சாக்பீஸ் கோலம் வரைந்து வைத்துவிட்டு உன்னை மட்டும் ஆம்புலன்ஸில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்று விட்டார்கள். நான்…இந்த அதிர்ச்சியில்…நடந்தது….நடப்பது…நடக்கப் போவது..என அனைத்தையும் ஒரு இயந்திர கதியில் வாயடைத்துப் போய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன சொல்ல வந்தாய் பத்மா என்னிடம்.?..என்ன கேட்க வந்தாய் பத்மா…? என் மனது இந்தக் கேள்வியையே கீறல் விழுந்த இசைத்தட்டு போல மறுபடியும் மறுபடியும்…கேட்டுக் கொண்டிருந்தது.
அதற்குள் சூர்யா டவர்ஸ் ல் வசிக்கும் அத்தனை வீடுகளுக்கும் விஷயம் காட்டுத்தீ போல பரவி கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்…அவர்கள் அனைவரும் பொதுவாகச் சொன்ன ஒரே வார்த்தை…இன்னைக்குக் காலைல தானே இந்தப் பொண்ணு எங்க வீட்டுக்கு வந்து எங்களோட பேசிட்டு போச்சு…..சாயங்காலம் இப்படி ஒரு முடிவுக்குவர என்ன காரணமோ..?
என் இதயத்தில் யாரோ ஊசியால் சுருக்கென்று குத்தியது போல வலி..! ஓ…பத்மா…எனக்குத் தெரியும் உன் குணம்….நீ என்ன நினைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக
சென்று உன் இறுதி தரிசனத்தை காட்டிவிட்டு வந்திருக்கிறாய் என்று…உனக்கு மட்டுமே தெரியும் நீ..போட்ட திட்டம்….கோழை போல் நீ எடுத்த தற்கொலை முடிவு…..அது எங்கள் அறிவுக்கு எப்படித் தெரியும்…?…இப்படிச் செய்து கொண்டாயே……..உன் அம்மா…அப்பா வந்து கேட்டால் இங்கு நாங்கள் என்ன பதில் சொல்லப் போகிறோம்….? உன்னை இந்த நிலைக்கு தள்ளியவனை நீ என்ன செய்யப் போகிறாய்…? என் மனம் பிதற்றிக் கொண்டே இருந்தது.
இந்த கோர நிகழ்வு நடந்து அரைமணி நேரத்திற்குள்…போலீஸ்…பிரஸ்….புகைப்படக்காரர்கள்….தொலைகாட்சி செய்திகள் குழு மற்றும் வேடிக்கை பார்க்கும் கூட்டம் என்று இது போன்ற நிகழ்வுக்காகவே காத்திருப்பது போல சலசலத்தார்கள்….அவரவர் பங்குக்கு கொஞ்சமும் கருணையில்லாமல் கயிறு திரித்துக் கொண்டிருந்தார்கள்..பின்னே..
தற்கொலை செய்து கொண்டது வயசுப் பெண்ணாச்சே…மேலும்…அவர்கள் வீட்டுப் பெண்ணும் இல்லையே…!
நான் அவர்களை விட்டு மெல்ல நகர்ந்து வெளியேறினேன்…பத்மா கடைசியாக நின்ற இடம் எது ..?…..மொட்டைமாடி…அங்கே சென்று பார்க்கலாம்….என லிப்டில் ஏறி
மொட்டைமாடிக்கு சென்றேன்…நல்லவேளை…. அங்கே யாரும் இல்லை.அவள் நின்ற இடத்தை நான் நெருங்கியதும் என் மனம் பதறியது.
வயிற்றில் எதுவோ திரண்டு புரண்டது….ஒரு இனம் புரியாத உணர்வு வயிற்றைப் கலக்க ..மெல்ல சென்று அங்கிருந்து கீழே பார்த்தால்…அதல பாதாளமாய்…என் ..தலை கிறுகிறு வென்று சுற்றி…நா… வரண்டது…..பத்மா…எங்கிருந்துதான் …….உனக்கு இவ்வளவு தைரியம் வந்ததோ ….நினைத்துக் கொண்டே நிலாவைப் பார்க்கிறேன்..
“நிலாவே…என்னோடு சேர்ந்து நீயும் தானே…இதற்கு சாட்சி..?” என் கண்கள் நிலவைக் கேள்வி கேட்டது.
காற்றில் சட சட வென்று காகிதம் அடித்துக் கொள்ளும் சத்தம்..காலடியில் .கேட்க.. குனித்து பார்க்கிறேன்…அது ஒரு டயரி….!
மின்னலென அதை கையில் எடுத்துக் கொண்டு யாராவது பார்க்கிறார்களோ என்று அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே….இன்னும் ஒருவரும் மாடிக்கு வரவில்லை…ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு .வேக வேகமாக கீழே இறங்கி என் வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டேன். நெஞ்சு திக் திக் கென அடித்துக் கொள்ள….டயரியைப் அவசரமாகப் புரட்டிப் பார்க்க…..அதில்… பத்மாவின் மணி மணியான கையெழுத்து….மார்ச் 6 – 2012…என கொட்டையாக எழுதி கையெழுத்து போட்டிருந்தது…கடைசியாக அவள் எழுதிய வரி இதுவாகத் தான் இருக்கவேண்டும்….நினைத்த மாத்திரத்தில் கண்களில் இருந்து என்னையும் அறியாமல் கண்ணீர் ..தாரை தாரையாய் வழிந்தது.
நினைவுக்கு வந்தவளாய்….அப்படியானால்…அவள் எழுதிய பேனா….??? ஒ…..நான் அதை எடுக்க எப்படித் தவறினேன்….? மீண்டும் மாடிக்கு கையில் பென்டார்ச்சை..எடுத்துக் கொண்டு தட தட வென்று ஓடி…மெல்ல தரையை பார்த்து பேனாவைத் தேடும் விதமாக ஒளியடிக்கிறேன்.. ..நான் நினைத்தது போலவே…அந்தப் பேனா கைப்பிடி சுவர் ஓரமாக தேங்கிக் கிடந்தது.. அசுர வேகத்தில் பேனாவை எடுத்துக் கொண்டு கீழே வந்து வீட்டிற்குள் புகுந்து கதவைத் தாளிட்டேன்…பயத்துடன் மூச்சு வாங்கியது….ஆமாம்…நான் ஏன்.. அவளது டயரிக்காக இவ்வளவு பதட்டப் படுகிறேன்…எனக்கே புரியவில்லை..வெறும் ஆர்வம்..மட்டும் தான்..
இன்னும் டயரியில் வேறு என்ன எழுதி இருக்கிறாள் பார்க்கலாம் என புரட்டிய போது…..சூர்யா டவர்ஸ்..புராணம்……அழகாக ஆங்கிலத்தில் பத்மா…இதில் வசிக்கும் ஒவ்வொரு வீட்டைப்பற்றியும் அங்கே இருப்பவர்கள் பற்றியும் எழுதி வைத்திருந்தாள்…அப்படி என்றால் இது ரொம்ப ஆபத்தான டயரி தான்…இது என்கிட்டயே இருக்கட்டும்…இப்போ முதலில் அதை ஒளித்து வைக்க வேண்டும்….அவளைத் தான் என்னால் காப்பாற்ற முடியவில்லை..இந்த டயரியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்….ஏதோ வேகத்தில் செய்வது குற்றம் என்று தெரிந்தும்…ஒரு அசட்டு தைரியத்தில்…டயரியை ஒளித்து வைக்க இடம் தேடினேன்…மனதுக்குள் ஒரு எதிர்பார்ப்பு…என்னைப் பற்றி என்ன எழுதி இருப்பாள் பத்மா….நினைத்த மாத்திரத்தில் புரட்டியவுடன்..அந்தப் பக்கம் வந்தது…..G2 ப்ரியா ஆன்ட்டி….ஆம் அது நான் தான்….படிக்க ஆரம்பிக்கிறேன்…….
டிடிங்…டிடிங்….அழைப்பு மணி சத்தம்…!
திகிலோடு டயரியை மூடி…..புத்தக அலமாரிக்குள் திணித்துவிட்டு…கதவைத் திறக்கிறேன்…..வாசலில் போலீஸ்…! அத்தனை குளிரிலும் எனக்கு வியர்த்து கொட்டியது..
நீங்க…ப்ரியா மேடம் தானே….வந்திருந்த போலீசின் குரலில் ஆச்சரியப் படும் வகையில் ஒரு மென்மை….இழைந்தது.
ஆமாம்…..இந்த மாதிரி அந்தப் பொண்ணு செய்துகொள்வாள் என்று நாங்க யாரும் எதிர்பார்க்கலை….
ம்ம்ம்…இதுபோல் நடந்து விடுவதை யாராலும் யூகிக்க முடியாது தான்…பாவம்…எனக்கு நீங்க கொஞ்சம் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு தரணம்……செய்வீர்களா?
எனது நேரம் வீணாகாதிருந்தால்…..அவசியம் செய்வேன்….என்னால் அலைய முடியாது….
நோ…நோ…அவ்வளவு சிரமம் தர மாட்டோம்….
இப்போ கொஞ்சம் அந்த பெண்ணோட பிளாட்டுக்கு வரீங்களா….கொஞ்சம் சின்ன விசாரணை…இருக்கு…மேலும் அந்தப் பெண்ணோடு கூட இருந்தவனின் கைபேசி எண் உங்களிடம் இருந்தால்…அதையும் தாருங்கள்.
இதோ…வருகிறேன்…..நீங்கள் செல்லுங்கள்……ஐந்தாவது மாடி …நம்பர் .502….அந்தப் பையன் பெயர் பிரமோத்…இதோ அவனது மொபைல் நம்பர்…என்று என் மொபைலில் இருந்து எடுத்து நீட்டினேன்…..
தேங்க்ஸ் மேடம்..
அவரும் அந்த எண்ணுக்கு அடித்துப் பார்த்து விட்டு…போன் சுவிட்ச்… ஆப்…. பண்ணி இருக்கிறதே..என்றார்…
இப்போ… அந்த பெண் உங்களுக்கு சொந்தமான பிளாட்டில் தான் குடி இருப்பதாக சொன்னார்கள்…. நீங்களும்..அவங்களோட நல்ல நட்புன்னு சொன்னாங்க…அதோடு இல்லாமல்…..இந்த நிகழ்வை நீங்கள் தான் முதலில் பார்த்ததாகவும் பேசிக் கொண்டார்கள்…அதனால் தான் நான் உங்களைத் தேடி வந்தேன்..
அதெல்லாம் சரி தான் சார்..அந்த பிளாட் என் மகனுடையது தான்…என் மகன் இப்போது துபாயில் இருக்கிறார்…இவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கோம்.. அவ்ளோதான். ஆனால் எனக்கு அவளது இந்த முடிவின் பின்னணி நிச்சயமாகத் தெரியாது…கடந்த இரண்டு வருடங்களாக அவள் ஒரு இளைஞனோடு கூட்டு வாழ்க்கை நடத்துவதாக இங்க குடி வந்தாள்..அதனாலேயே இங்கே இருக்கும் யாருக்கும் அவள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை..
வாய்க்கு வந்ததை கண்டபடி எல்லாம் பேசுவார்கள். ஆனால் அவள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்ட மாதிரி தெரியாது……அவர்கள் இருவரும் சந்தோஷமாகத் இருப்பது போல் தான் தெரியும்…ஆனால் நாளடைவில் ஒருவேளை..இவர்களின் பேச்சு அவளுக்கு மனவருத்தத்தை தந்திருக்கலாம்…ஆனாலும் அதெல்லாம் இதுக்கு காரணமாய் இருக்க முடியாது….ன்னு எனக்குத் தெரியும்..
அவளும் சின்னப் பெண் தானே…முதலில் மூன்றாவது மாடியில் இருக்கும் பிளாட்டுக்கு தான் குடி வந்தார்கள்…போன வருஷம் தான் அந்த பிளாட் ஓனர் வற்புறுத்தி காலி செய்ய சொன்னதாக சொல்லி ஆறு மாதம் முன்னால் தான் எங்கள் பிளாட்டுக்கு மாற்றிக் கொண்டார்கள்…ஒருமுறை என்னிடம் வருத்ததோடு சொன்னாள்…இதற்கு முன்பு இருந்த வீட்டின் சொந்தக்காரங்க இவள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை ஏதேதோ காரணம் சொல்லி கணக்குக் காட்டி..ரூபாய் நாற்பதாயிரம் .திரும்பக் கொடுக்காமல் கழித்து விட்டதாகவும் அதனால் அவளுக்கு நிறைய கடனாகி விட்டதாகவும் வருத்தப்பட்டு சொன்னாள்.
இத்தனைக்கும் ரெண்டு பேரும்…இன்ஜினியரிங் படிச்சு முடிச்சு கைநிறைய சம்பாதிக்கிறவங்க தான்..என்ன..கொஞ்சம் சுதந்திரமா…..முற்போக்கா… சிந்திகறதா நினைத்துக் கொண்டு…..இப்படி….ஆனா அதுவே…இப்போ….அவளது உயிரைப் பறிச்சிடுச்சு.
இந்த பிளாட்டின் இன்னொரு சாவி உங்களிடம் இருக்குமே…துப்பு துலக்க வசதியாக இருக்கும்…அனாவசியமா பூட்டை உடைக்க வேண்டாமே..கைரேகை எடுப்பவர்…வந்திருக்கார்…தற்கொலைக்கு எதாவது துப்பு…சீட்டு…குறிப்பு….!!
அவர் சொன்னதும் என் கால்கள் கிடு கிடு வென நடுங்க ஆரம்பித்தது……பேசாமல் டயரியை கொடுத்துவிடு…உனக்கெதுக்கு வீண் வம்பு…? உள்ளிருந்த நல்ல மனம் ஆணையிட்டது….ஆனால்…ஆசை யாரை விட்டது…
இதோ இருக்கு சார்..என் சாவிக்கொத்தோடு அந்த வீட்டின் சாவியும் இணைந்து இருந்தது…நல்லதாக ஆயிற்று….இந்தாங்க…502….எடுத்துக் கொடுத்தேன்.
அதற்குள் பிளாட்டின் முன்பும் கணிசமாக கூட்டம்…வேடிக்கை பார்க்க….அப்போ..நான் கிளம்பறேன்….சார்..மெல்ல நழுவினேன்….
வாங்க மாடம்…ரொம்ப தேங்க்ஸ்….நான் சாவியை போகும்போது வந்து கொடுத்துட்டுப் போறேன்….
என் பதிலுக்குக் காத்திராமல் …கூட்டத்தைப் பார்த்து இங்க யாரும் கூட்டம் போட்டு எங்க வேலைக்கு தொந்தரவு கொடுக்காதீர்களேன்….அவர் பத்மா வீட்டுக்குள் நுழைந்தார்..அவரோடு கூட அவரது சகாக்களும்…
நான் என் வீட்டுக்குள் நுழையும் போதே..எனக்குள் ஒரு எண்ணம்….மோப்ப நாய் வருமோ..இவர்களோடு கூட…! நினைப்பே…திக் கென்றது….வரும்போது பார்த்துக்கலாம்…!
எனது அசட்டு தைரியம் எப்பவுமே பச்சைக் கொடியோடு தயாராயிருக்கும்.
உள்ளே நுழைந்ததும்…மீண்டும் டயரியை எடுத்து…வேக வேகமாக படிக்க….அதில் விசேஷமாக ஒன்றும் இல்லை….ஒவ்வொரு வீட்டிலும் அவள் கண்ட சிறு சிறு விஷயங்கள்…இரண்டாவது மாடியில் இருக்கும் மணி தான் மனைவியை அடித்து துன்புறுத்தி…வரதட்சிணை கொண்டு வரும்படி படுத்திய பாடு…தினசரி சண்டையில் அவளை அடித்து துவைப்பது……
அவள் வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் காஞ்சனாவின் கணவன் வேறொரு பெண்ணோடு குடும்பம் நடத்தும் ரகசியம் காஞ்சனாவுக்குத் தெரிந்ததும்…இவளிடம் வந்து
வருத்தப் பட்டு சொன்னது….தனது வயதான காலத்தில் கூட தனக்கென ஒரு பாதுகாப்பின்மையை உணர்வதாக நினைத்து அழுதது.
பழைய வீட்டுக் காரம்மா..இவளின் நாற்பதாயிரத்தையும் தராமல் ஏமாற்றி இவளை கடனாளி ஆக்கியது…அதனால் ப்ரமோதுக்கும்..தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபங்கள்..
அப்படியே..அடுத்து….என்னைப் பற்றி…..எனக்குள் ஒரு ஆவல்….நிமிர்ந்து உட்காருகிறேன்…பத்மா..நல்ல புத்திசாலியும்…எழுதும் திறன் படைத்தவள் தான் என்றும் அவள் எழுத்து நடை சொல்லிக் கொண்டே போனது.
ப்ரியா ஆன்ட்டி….எனக்கு ரொம்பப் பிடிக்கும்…ரொம்ப நல்ல குணம் தான்…இருந்தும் ஏன் இவர்களை இவர்களின் கணவன் நிராகரித்தான்…..இவர்களை விட வேறு எந்தப் பெண் அவரது வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி விட முடியும்..?…என்று முடித்திருந்தாள் . என்றோ..நான் சொன்ன சில விஷயங்களின் தொகுப்பாக எழுதி இருந்தாள்..
அடுத்து சில பக்கங்கள் காலியாக….அதன் பின்….பிரமோத்….நீ செய்வது அநியாயம்…என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே….நான் எப்படி என் பெற்றோர்கள் முகத்தில் விழிப்பேன்….நான் செய்தது தவறு என்று எனக்குப் புரியும் போது…நீயும் இல்லை என் அருகில்…என் சுய மரியாதை…எனது தைரியம் எதுவும் என்னோடு இல்லாமல் போனதே….நானே தான் என் வாழ்வின் முடிவுக்குக் காரணம்….திட்டவட்டமாக…நான் தான் காரணம்…. அழுத்தி அழுத்தி….எழுதி இருந்தது…மேலும் .ஐ…லவ்…பிரமோத்…. எழுதி பத்மா பிரமோத்…கையெழுத்திட்டு ஒரு ரோஜாப்பூ… வரைந்து வைத்திருந்தாள்…
அதை படித்து விட்டு நான் பிரமை பிடித்தவள் போல் அமர்ந்தேன்……இவள் ஏன் இதை எல்லாம் அவளின் அத்தனை வேலைகளின் ஊடே இவர்களைப் பற்றியெல்லாம் எழுதி வைத்திருக்கிறாள்..? தான் சுயநலமாக எடுத்துக் கொண்ட வாழ்க்கையை நியாயப் படுத்தவா…? அடுத்தவரின் வாழ்வோடு தன் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கவா? இல்லையென்றால்…கல்யாணம் செய்தவர்கள் எல்லாருமே இப்படித் தான் கஷ்டப் படுகிறார்கள்…அதனால் இனிமேல் நான் வாழ முடிவெடுத்தார்போல்
தனது சிநேகிதிகளுக்கு புத்தி சொல்லவா…? அடி அசட்டுப் பெண்ணே….இவ்வளவு திட்டம் போட்டாயே…கடைசியில் என்னாச்சு….உன்னால் உன் மனதையே கட்டுக்குள்
வைத்துக் கொள்ள முடியவில்லையே……
என் ஆராயும் சிந்தனைக்கு நல்ல தீனி….ஆம்…அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மணம் செய்து கொண்ட பெண்கள் … பின்னாளில் எப்படி எல்லாம் கணவனின் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்…இதை எல்லாம் பார்த்தால் தான் வாழ்வது…கல்யாணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்ந்து புரிந்து கொண்டுப் பொருந்தி வந்தாள் மேற்கொண்டு வாழ்வது இல்லாத பக்ஷத்தில் விலகி வெளியே வருவது மிகவும் பாதுகாப்பானது என்று எண்ணி இருப்பாள்..போல….அதனால் தான் அவளை யார் அவதூறாகப் பேசினாலும்..அதை பொருட்படுத்தாமல் பக்குவமாய் ஏற்றுக் கொண்டிருக்கிறாள்….ஆனால் எப்போது…. தான் எடுத்த இந்த முடிவில் பிரமோத் அவளை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்தாளோ …..அந்த நொடியே அவள் மனத்தால் இறந்து விட்டாள்.கல்யாணம் செய்து கொள்பவனே..ஒரு குடும்பமாக குழந்தைகளோடு வாழும் போதே…..சமயத்தில் வேறொரு நட்போடு சென்று விடும் போது….இவன் திருமண பந்தமே இல்லாமல் கூட வாழும் ஒருத்தியை தனக்கு வேண்டாத போது அறுந்த செருப்பாய் உதறுவது போல் கழட்டி விடுவது ஒன்றும் கஷ்டமில்லையே….?.இதை அனுபவமாக உணர்ந்ததும்……அந்தக் கணமே…..அவளது பாதுகாப்பு வளையமும் கழன்று விழுந்து விட்டது.
தான் எடுத்த முடிவின் கோரம்…அவளைப் பார்த்து சிரித்திருக்கிறது….அவள் ஆதரவாக சாய்ந்து கொள்ள ஒரு தோளும்…ஏற்காத போது….வீடு வீடாக வந்து..
பார்த்து….தான் நல்லவள் தான் என நிரூபித்துக் காட்டுவதற்காகவே…இப்படி ஒரு கோர முடிவைத் தானே தேடிக் கொண்டாளோ….!
அவள்..கீழே விழும்போது….என்னவெல்லாம் எண்ணியிருப்பாள்….என் கற்பனை எகிற….நிச்சயமாக அவளது மனக் கண் முன்னே….ஒவ்வொருவரின் வீட்டு நிகழ்ச்சியும் வந்து போயிருக்கும்.
பத்மாவின் ஆவி நினைக்குமோ……அத்தனை வீடுகளிலுமே ஏதோ ஒரு பிரச்சனையைத் தானே ஒவ்வொருவரும் நித்தம் சமாளித்துக் கொண்டு வாழ்கிறார்கள்…நான் மட்டும் அவசரப்பட்டு விட்டேனோ….என்று…!
வாழ்க்கை என்பதே கானல்நீர் போல் தானோ..?
நினைத்த மாத்திரத்தில் ஆமாம் என்பது போல அழைப்பு மணி அடிக்க….
ஒரு தீர்க்கமான முடிவுடன்….டயரிக்கு நடுவில் அந்தப் பேனாவை சொருகி வைத்து….கையோடு எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தேன்.
எதிர்பார்த்தபடியே..அந்த போலீஸ் ஆபீசர்….சாவிக் கொத்தோடு….
சார்..நானே…. மேலே வந்து பார்க்கணும்னு.. இருந்தேன்…வீட்டைப் பூட்ட முடியாது… சாவி உங்க கிட்ட மாட்டி கொண்டது….
இன்று…. மாலை நான் வாக்கிங் கிளம்பும்போது அந்தப் பெண் பத்மா வந்தாள்…நான் அவசரமா கிளம்பறேன்..வந்ததும் பேசறேன்னு சொன்னேன்….அந்த நேரத்தில் எனக்கே
தெரியாமல் என்.. வீட்டு டேபிள் மேல அவள் தனது டயரியை வைத்து விட்டு போயிருக்காள் …நான் இப்போ வந்து தான் கவனித்தேன்……இது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கலாம் …சொல்லிக் கொண்டே அவரிடம் அந்த டயரியை நீட்டினேன்..
என் நெஞ்சில் இருந்து ஒரு பெரிய பாறாங்கல்லை இறக்கி வைத்த நிம்மதி..ஒ….அடப் பாவமே…உங்களுக்கு ரொம்ப நன்றி மேடம்…பத்திரமாக வைத்துக் கொண்டார்..
அந்த டயரி .உள்ளே ஒரு பேனா…என்றேன்…என் கவலை எனக்குத் தானே தெரியும்.
அதையும் கையில் எடுத்து வைத்துக் கொண்டார்.
என் மூச்சு இப்போது தான் சீரானது…
அவர் கிளம்பத் தயாரானதும்…..
சார் என்று இடைமறித்தேன்…
சொல்லுங்க…மேடம்…..என்றார்..
எங்கள் வீடு எந்தப் பிரச்சனையும் வராமல் காலி செய்து கொடுக்க நீங்கள் தான் உதவ வேண்டும்….ப்ளீஸ்…என்றேன்…
அந்தப் பெண்ணோட அம்மா அப்பாவிடம் தொடர்பு கொண்டு பேசியாச்சு…அந்தப் பையன் பிரமோதை…ட்ரேஸ் பண்றோம்……கண்டிப்பாக…நாங்க உங்களுக்கு உதவி செய்து தருவோம்…கவலைப் படாதீர்கள்……நம்பிக்கையோடு சொல்லிவிட்டு நகர்ந்தார்.
இத்தனை பேரின் தலையை பிய்த்துக் கொள்ள செய்து விட்டு…பத்மா நிம்மதியாகப் பறந்து விட்டாள்…
இனிமேல் சூர்யா டவர்ஸ்-ல் வெறும் வாய்கள் மெல்ல பத்மா என்ற அவல்…..இல்லை.