(எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாள் ..)
இடம் கொடுத்த பூங்குழலி...
இனிமையை தேனுக்குத்
தானம் தந்த வேணியோ..
ராகத்திற்கே உமதுருவம்
ஈந்த திரிபுரசுந்தரியே
ராகமாலிகையை விதையாய்
தெளித்த ரட்சகியோ ?
சுப்ரபாதமும்....சகஸ்ரநாமமும் . ...
குறையொன்றுமில்லை ...
உருகலும்..
பஞ்சரத்னத்தின் மருகலும்..
கங்கையே இந்த நங்கையை
இறங்கி வந்து ஆராதிக்க
பெண்மைக்கு சித்திரச்
சின்னமாய் அச்சுப் பதிக்க..!
இசைராஜ்ஜியத்தின்
என்றும் இளவரசியாய்..
தம்பூராவோடு மீராவாய்...
வீணையோடு வேணியாய்..
உயர்ந்த நட்சத்திரமாய்....
வான்மழை ஏற்றிய
அணையாத
குத்துவிளக்கு நீங்கள்..!
மூடிய விழிகள்
இசையைப் பார்க்க ஏகமாய்....
மூக்குத்திக் கண்கள்
உலகைத் திறக்க..கானமாய்...
கோடியில் முதலாய்...
முதலிலும் முதலாய்..
வரையாத உயிரோவியம்...
எழுதாத இசைக் காவியம்..
குறுந்தகடில் மௌனமாய்
ஒளிந்திருக்கும் விநோதினி...
விடியலில் கோபுரத்தின்
உச்சியில் கேட்கும் ஹம்சத்வனி....
இசையை உணவாய்...ஏற்று
ஜீவித்த உங்கள் இடம்
இன்னும் வெற்றிடமாய்...இங்கே...
யாராலும் நிரப்ப முடியாமல்..!
இசைக்கே அர்ப்பணித்த
உமதுயிர் எப்படிப் ..பாடாமல்
இருக்குமோ சொர்க்கத்தில்...!
அடுத்த பிறப்பெடுத்து
எட்டிப் பாருங்கள்....
இங்கே..மீண்டும்..
உமது குரலுக்காய்
காத்திருக்கும்...மேடைகளும்
உருகும் மனங்களும்..
============================
ஜெயஸ்ரீ ஷங்கர்....
சிதம்பரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக